அமெரிக்காவில் இந்திய தூதரக வளாகத்தில் காந்தி சிலை அவமதிப்பு..!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை மர்மநபர்கள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.

வாஷிங்டன், ஜூன்-4

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபோலீஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, போலீஸ் அதிகாரியால் முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். ஜார்ஜ் கெஞ்சி கேட்டும் போலீஸ் அதிகாரி தனது காலை எடுக்காதது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஒரு வாரமாக அங்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

போராட்டங்களின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை மர்மநபர்கள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் சிலையை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் இந்திய தூதரக வளாகத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *