110 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது நிசர்கா புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை, ஜூன்-3

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது.

இன்று தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்தது.

இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *