விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது.. அவசரச்சட்டம் பிறப்பித்தது, தமிழக அரசு..!

விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை, ஜூன்-2

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை எவ்வித சிரமமுமின்றி இலாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடைய ஏதுவாக மின்னணு சந்தை முறைக்கு அனுமதியளித்தமை, வணிகர்களின் சிரமத்தினைப் போக்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கியமை மற்றும் ஒருமுனை விற்பனைக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண்மை விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின்பேரில் பிப்ரவரி 2017 முதல் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் நன்மையைக் கருத்திற்கொண்டு, தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-இல் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஓர் அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கருதியது.

இந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப,

தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

மேற்கண்ட பன்முகத்தன்மையிலான விற்பனை முறைகளில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விற்பனை முறையினையும் தேர்வு செய்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், அதன் மூலமாக தங்கள் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையினைப் பெற்று பயனடையவும் இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தினைப் பிறப்பித்துள்ளார்கள்:-

i. தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனைச் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-இல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்;
மற்றும்
ii. விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *