வெள்ளை மாளிகை முன்பு கலவரம்.. பதுங்கு குழியில் ஒளிந்த அதிபர் டிரம்ப்..!

அமெரிக்காவில் ஜார்ஜ் என்ற கருப்பின வாலிபர் போலீசாரால் கொல்லப்பட்டதை கண்டித்து பயங்கர கலவரங்களும், வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. அதிபர் மாளிகையை கலவரக்காரர்கள் சூழ்ந்துக் கொண்டதால், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகளால் 40 நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன், ஜூன்-2

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும், அவரது கழுத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்து.

அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகை முன்பும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த ஆறு நாட்களாக அங்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. போராட்டங்களின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளில் நிகழ்ந்திராத மிகவும் மோசமான கலவரமாக இது கூறப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை கண்டித்து சுமார் 140 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 20 மாகாணங்களில தேசிய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டதாக 2,564 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 40 நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அருகே திரண்ட ஏராளமானோர் அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கிருந்த கட்டிடத்தின் ஜன்னல்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கார்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா, அதிபரின் மகன் பாரன் உள்ளிட்டோர் பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே அதிபா் டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகச் சாடியிருந்தாா். போராட்டத்துடன் தொடா்புடைய ‘அன்டிஃபா’ அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதாகவும் அவா் சுட்டுரையில் பதிவிட்டாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *