தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு.. பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, ஜூன்-2

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக் குறைவால் காலமானார். சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன், ஒருமுறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய கே.என்.லட்சுமணன் மறைவு வருத்தமளிக்கிறது. மேலும், நெருக்கடி நிலை சமயத்தில் அவரது பங்கும், சமூக கலாச்சார ரீதியில் அவரது பணியும் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,‘ ‘மூத்த தலைவரும், தமிழக முன்னாள் எம்எல்ஏவுமான கே.என்.லட்சுமணன் மறைவு செய்தியால் மன வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்‘‘ என கூறியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘கொள்கை ரீதியாக மாற்று முகாமில் இருந்தாலும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்களுக்கு திமுக சார்பில் ஆறுதலை தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதி மரியாதைகள் நடைபெற உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த ஆட்களுடன் அவரது இறுதிச் சடங்குகள் நிகழும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *