பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

சென்னை, ஜூன்-1

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப் படவுள்ளன.

தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளர்ச்சியைப் போலவே, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இத்திட்டம் அமையும். இதனைச் சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இத்திட்டம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வடபகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் அமையும். புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என, நாளைய உலகை நோக்கி தமிழ்நாட்டை அழைத்துச் செல்லும் தொலைநோக்குத் திட்டமாக இது அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *