முதல்வன் பட பாணி அதிரடி காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ..!

முதல்வன் திரைப்பட பாணியில் ரேஷன் கடையில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் கடை விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை, ஜூன்-1

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி முடிந்தபின் காரில் ஏறி செல்ல முயன்ற அமைச்சர் செல்லூர் ராஜூயை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகை செல்வி என்ற பெண் மறித்து, தனது குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருப்பதாகவும் ரேஷன் கடையில் ஒன்பது கிலோ மட்டுமே அரிசி வழங்கியுள்ளதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். மேலும் கடை ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் விரட்டி அனுப்பி விட்டதாகவும் கூறினார்.

இதைதொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு கட்சி தொண்டர் ஒருவரின் புல்லட் பைக்கில் ஏறி சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, சம்பந்தப்பட்ட பெண்ணையும் அங்கு வரவழைத்தார். தொடர்ந்து, ரேஷன் கடையில் அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த விற்பனையாளர் தர்மேந்திரன், தனக்கு உதவியாளராக அங்கீகரிக்கப்படாத பெரியசாமி என்பவரை வைத்திருந்தது தெரியவந்தது. நியாய விலை கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 9.5 கிலோ மட்டுமே பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அந்த எடையாளரை பணியிடை நீக்கம் செய்ய கூட்டுறவுத் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து உடனடியாக கடை விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். பெண் செய்த புகாரையடுத்து நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *