அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..!

அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பணம் பெற்றுக் கொண்டு உணவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-1

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலையில் காலை, மதியம், இரவு உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை – எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்‌ஷய பாத்திரமாக விளங்கியது.

கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதற்கான உணவுக்கான செலவீனத்தை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கின.

ஏப்ரல் 23-ந்தேதி முதல் மே 17-ந்தேதி வரையிலும், மே 20 முதல் 28-ந்தேதி வரையிலும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 1 கோடியே 36 லட்சம் பேர் ஊரடங்கு காலத்தில் இதன் மூலம் பயனடைந்தனர். அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கிய செலவுகளுக்காக 3 கோடியே 84 லட்ச ரூபாய் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது.இன்று முதல் அம்மா உணவகங்களில் பணம் பெற்றுக் கொண்டு உணவுகளை வழங்க வேண்டும் என்று சுய உதவிக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று முதல் மூன்று வேலையும் உணவிற்கு பணம் பெறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *