அரசுப்பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் செலுத்தும் வசதி.. அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேட்டி..!

அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-1

இது தொடர்பாக இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு நீங்கலாக பிற மாவட்டங்களில் இன்று 50% பேருந்துகளுடன் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. 60% பயணிகள் அதாவது ஒரு பேருந்தில் 32 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் வைரஸ் தொற்று பரவா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம். சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். மக்களின் தேவைகளுக்கேற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நாளை முதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் குறைவாக இருப்பதால் தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை. பயணிகள் வரத்தை பொறுத்து தனியார் பேருந்துகள் இயக்க விரைவில் முடிவு எடுக்கப்படும்.

தமிழக மலைக் கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் 6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகள் மற்றும் 2,637 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். அரசு பேருந்து ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *