தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 68 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவை தொடங்கியது.

சென்னை, ஜூன்-1

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல தளர்வுகளை அளித்து, ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் இயங்கின.

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி 7 மற்றும் 8 வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. உள்ள மொத்த இருக்கைகளில், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. அனுமதிக்கப்பட்டவைகளைத் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

பேருந்தில் முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளுக்கு கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்றும்படி இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள். பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பயணிகள் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுத்துறை ஆகிய ஊர்களுக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கோவை இன்டர்சிட்டி ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மோரப்பூர், ஜோலார்போட்டை வழியாக காட்பாடி செல்லும் கோவை-காட்பாடி இன்டர்சிட்டி ரயிலில் 300 பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனைபோல், 800 பயணிகளுடன் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்று சேரும்.மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *