மானுட சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வள்ளலார்

 வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்

 மானுட சமுதாயம் சாதி,சமய பிணக்குகளில் சிக்குண்டு   சீர்கெடும் போதெல்லாம் ஒரு சீர் திருத்தவாதி பிறக்கின்றான். அவன் இந்த மனித சமுதாயத்தின் அறியாமைகளை  விலக்கி அறிவு கண்ணை திறந்து,மாயயைகளை அகற்றி வாழ்வியலை  நெறிப்படுத்துகின்றான்.

 அந்த வகையில்  தமிழ்நாட்டில் 19 ம் நூற்றாண்டில், அவதரித்து  இன்றைய நவீன  உலகத்துக்கும் ஏற்ற முற்போக்கு சிந்தனைகளை அன்றே எடுத்துரைத்து சமரச சுத்த சன்மார்க்கம்  எனும்  புதிய மார்க்கத்தை கண்டவர்.  அவர் தான் இராமலிங்க அடிகள் என்னும் இயற்பெயர் கொண்ட வடலூர் வள்ளலார்.

இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூர் என்னும் சிற்றூரில்  சுபானு வருடம் புரட்சி மாதம் 21 ம் நாள்  இரமையாபிள்ளை சின்னம்மையார் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

 இவர் கைக் குந்தையாக இருக்கும் போதே  தந்தையார்  காலமாக 1825 ஆம் ஆண்டு அம்மா மற்றும்  அண்ணனுடன் குடும்பத்தினர் சென்னையை அடுத்த பொன்னேரிக்கு     குடியேறினர். பின்னர்   சென்னை ஏழு கினறு பகுதியில் வசித்தனர்.

 ஓதாமல் உணர்ந்த பெருமான்

 இராமலிங்க அடிகளை அவரது அண்ணன்   பள்ளிக்கு அனுப்பிய போது  சகமாணவர்களுடன் அமராமல் தனித்தே காணப்பட்டார். ஆசிரியர் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற ஔவையின் பாடலை  பாடமாக சொல்லி கொடுத்த போது  அதனை திரும்ப சொல்லாமல் அமைதியாக  இருந்துள்ளார் வள்ளலார். ஆசிரியர்  ஏன் இப்படி  இருக்கிறாய் என்று மிரட்ட நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடலில் நல்ல கருத்து  உள்ளது ஆனால் அமங்கலமாகவும் எதிர்மறையாகவும் உள்ளது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஆசிரியர் கோபத்துடன் நீயே பாடு என்று அதற்ற, மடை திறந்த வெள்ளம் போல் .

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்

என …வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர்.அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள் .இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை.ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி திட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று நா தழுதழுக்க  நெஞ்சு படபடக்க பதில் உரைத்தார்.

அன்று  முதல் வள்ளலார் எந்த பள்ளிக்கும் செல்லாமல்  அவரே உணர்ந்தும் கற்றும்  உரைத்தார். 

 சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப திறவுகோல்

 இரக்கத்தின் ஊற்றாக திகழ்ந்த இராமலிங்க அடிகள் வடலூரில் 1867 ஆம் ஆண்டு தருமச்சாலையை நிறுவி மக்களின் பசிப்பிணியை போக்கியவர்.  150 ஆண்டுகளை கடந்து இன்றளவும் அவர் ஏற்றி வைத்த அடுப்பு மக்களின்  பசியை  போக்குவதற்கா எரிந்து கொண்டே இருக்கிறது.

ஒன்றே குலம் ஒருவனே  தேவன் என்னும் திருமூலரின் வழிப்பற்றி  வள்ளல் பெருமானும் கடவுள் ஒருவரே  அவர் ஒளி வடிவானவர் என்ற தத்துவத்தை எடத்துரைத்து மெய்ப்பொருள் காட்டியவர் வள்ளலார்.  

 திருமூலர் – தாயுமானவர்-சித்தாந்திகள் எல்லோரும் கூறிய சன்மார்க்கம் வள்ளலாரிடம் புதிய பரிணாமம் பெற்றது. சைவ வட்டத்திலும் சித்தாந்த வட்டத்துக்குள்ளும் சுற்றி வந்த சன்மார்க்கத்துக்கு விடுதலை தந்து – மதம் கடந்த சன்மார்க்கத்தை ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு – உலகின் உயிர்க்குல ஒருமைப்பாட்டுக்கு எத்துணையும் பேதமுறாமல் சாகாக் கலையை கற்பித்தவர் .

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

 என்று அன்றைய வருணாசிரம நிலையை   சாடியுள்ளார்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று எல்லா உயிரிடமும் அன்பு செலுத்தும் கருணைய வடிவமானவர்.  இராமலிங்க அடிகள். அதனால் தான் அவர் வள்ளலார் என்று போற்றப்படுகிறார். சீவகாருண்யமே  பேரின்பத்தின் திறவு கோல் என்று பறை சாற்றியவர்.

  சீவகாருண்ய ஓழுக்கம்,அருள்நெறி, பேருபதேசம், மனுமுறைகண்ட வாசகம், நித்தியகருமவிதி, திருவருட்பா (6 திருமுறைகள்) ஆகியவை வள்ளலார் இயற்றிய முக்கிய நூல்களாகும்.

நூலாசிரியர், உரையாசிரியர், பதிப் பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள் ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என பண்முக திறன் கொண்டவராக திகழ்ந்தவர் வள்ளலார்.

19 ம் நூற்றாண்டில் இராஜராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் போன்ற தலைவர்களுக்கும்  முன்னோடியோக திகழ்ந்தவர் வள்ளலார் என்று கூறலாம்.

அருட்பெரும்  சோதி! அருட்பெரும் சோதி! தனிப்பெருங்க கருணை அருட்பெரும் சோதி  என்ற மகா மந்திரத்தை  உலகுக்கு உபதேசித்து  ஒளியே  கடவுள் என்று கூறி  ஆன்மிக வழிபாட்டை  நெறிபடுத்தி  சாதி சமயமற்ற சமரச சுத்த சன்மார்க்கம் கண்டவர் வள்ளல் பெருமான்.

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்று மைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவ ரும் ஒற்றுமை யுடன் வாழ வேண்டும். கொலை , கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்ட ப் படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.

விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவ சமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங் களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறிவதே உண்மையான  பக்தி நெறி என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.

வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொ ன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனைகள் . இன்றைய நவீன  காலத்துக்கும் எதிர்வரும் காலத்துக்கும் ஏற்புடைய வள்ளலார்  வகுத்த வாழ்வியல் கோட்பாடுகளை  சிந்தித்து செயல்பட்டால்  தீவிரவாதம், மதவாதம் நீங்கி  மனித சமுதாயம் நிச்சயம் மறுமலர்ச்சி அடையும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *