மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..! எதற்கு தெரியுமா? ..

ஏழை மக்களுக்கு உதவிடுவதற்காக தனது மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த ரூ 5 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

டெல்லி, மே-31

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

பொது முடக்க காலத்தில் மக்களே முயற்சி எடுத்து இல்லாதவர்களுக்கு உணவுப் பொருள்களையும் பிற உதவிகளையும் எய்வது மக்களின் உள்ளார்ந்த சேவை மனப்பான்மை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மதுரையில் முடிதிருத்தும் கடை நடத்திவரும் மோகன் என்பவர் தனது மகளின் படிப்புக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை பொது முடக்க காலத்தில் ஏழை மக்களுக்கு செலவு செய்தது பாராட்டத்தக்கது. இதுபோன்று பலர் உதவிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என கூறினார்.

மேலும் ‘‘கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *