பெற்ற தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகன்கள்.. கொரோனாவால் தொலைந்த மனிதம்..!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பீதி காரணமாக 80 வயதான தாயாரை அவரது மகன்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே-30

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை அடுத்த கிசான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. 80 வயதான இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மராட்டிய மாநிலம் சோலாப்பூர் சென்றார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், 80 வயதான பாட்டி அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இதையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், கார் மூலம் ஐதராபாத் வந்தார். அங்கிருந்து பஸ்சில் கரீம் நகர் வந்தடைந்தார். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கியிருந்தார். இதற்கான முத்திரையும் அவருக்கு வைக்கப்பட்டது.

கரீம் நகரிலிருந்து அவர் சொந்த ஊரான கிசான் நகருக்கு வந்தார். தனது தாயார் ஊருக்கு வருவதைப் பற்றி கேள்விப்பட்ட அவரது மகன்கள் கொரோனா பயம் காரணமாக அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அவரது மூத்த மகன் நரசிம்மா வீட்டின் வெளிக் கதவை பூட்டிவிட்டார். இதனால் வயதான அந்த தாயார் வீட்டின் முன்பு காலை 7 மணியிலிருந்து 1 மணி வரை காத்திருந்தார்.

கதவை திறக்காததால், சியாமளா அங்கிருந்த 2-வது மகனான ஈஸ்வரா வீட்டிற்கு சென்றார். அவரும் கொரோனா பீதி காரணமாக தனது தயாரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

80 வயதான தனது தாயாரை வீட்டுக்குள் அனுமதிக்காததை மூத்த மகன் நரசிம்மா கூறும்போது, ‘கர்ப்பிணியான எனது மகள் வீட்டில் இருக்கிறாள். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி, எனது தாயாரை அனுமதிக்க வில்லை’ என்றார்.

2-வது மகன் ஈஸ்வரா கூறும்போது, ‘நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். அது சிறிய வீடு, இதனால் எனது தாயாரை அனுமதிக்கவில்லை’ என்றார்.

2 மகன்களும் வீட்டிற்குள் அனுமதிக்காததால், தள்ளாத வயதில் சியாமளா பெரிதும் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், சுகாதார அதிகாரிகளும் அவரது மகன்களிடம், அவரது தாயாரின் உடல்நிலை பற்றி விளக்கினார்கள். அவருக்கு கொரோனா எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். இதை மூத்த மகன் நரசிம்மா ஏற்றுக்கொண்டு, தனது தாயாரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *