டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் 13 நகரங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்..!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட நாடு முழுவதும் 13 நகரங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி, மே-30

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதலில் 15 நாள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பின்னர் 3 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போதைய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து 5-வது முறையாகவும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. நோய் பரவுதல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவர வாய்ப்பு இல்லை.

4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. டெல்லி, மும்பை, புனே, தானே, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் இந்த 13 நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே 13 நகரங்களிலும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நகரங்களில் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை மாநில முதல்வர்களிடமே விட்டுவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 13 நகரங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள எந்த விதிகளையும் தளர்த்தக்கூடாது என்று மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கில் கோயில்களில் வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை 5ம் கட்ட ஊரடங்கிலும் நீட்டிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *