விவசாயிகளுக்கு உடனே கடனுதவி வழங்க வங்கிகள் ஒத்துழைப்பு தேவை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய தேவையாக வங்கிகளின் கடனுதவி உள்ளது. பொதுத்துறை வங்கி அதிகாரிகள், அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னை, மே-30

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வங்கிகள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும்.

ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு அத்தியாவசிய தேவையாக வங்கிகளின் கடனுதவி உள்ளது. பொதுத்துறை வங்கி அதிகாரிகள், அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

விவசாயிகள், சுய உதவிக்குழு, சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களுக்கு உதவ வேண்டும். வங்கிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி உழவர் கடன் அட்டைகள் வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி வழங்கப்ட உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *