அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள் படம்..! படக்குழு அதிர்ச்சி..!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சென்னை, மே-29

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ள படம் – பொன்மகள் வந்தாள். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தப் படம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பான செய்திகள் வெளியானதால் நேற்றிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். இதனால் முதல் நாளன்று சமூகவலைத்தளங்களில் பலரும் பேசும் படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் பொன்மகள் வந்தாள் படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் பிரைமில் நேற்று இரவு 12 மணிக்கு பொன்மகள் வெளியானது. ஆனால் தமிழ் ராக்கர்ஸில், அதில் உள்ள தகவலின்படி இரவு 11.16 மணிக்கே பொன்மகள் வந்தாள் படம் முறைகேடாக வெளியாகியுள்ளது. இதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனமும் அமேசான் பிரைம் தளமும் இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. தற்போது ஓடிடி-யில் ரிலீசாகும் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருவதால் திரைத்துறையினரை கலக்கமடைய வைத்துள்ளது.. இதற்காக சினிமா துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *