மே 31க்குப் பிறகு என்ன நடவடிக்கை? டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை…!

நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

டெல்லி, மே-29

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கி உள்ளன. உள்நாட்டு விமான சேவை, ரெயில் சேவை தொடங்கி உள்ளது. அதேசமயம், கொரோனா தொற்று எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா? அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா? கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன? அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, 4-வது கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஊரடங்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநில முதல்வர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்த கருத்து குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இன்று அல்லது நாளை ஊரடங்கு குறித்த முடிவுகள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *