ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீடுகளிலேயே இன்று விநியோகம்..

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே நேரடியாக இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 1 முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறலாம் எனவும், பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-29

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் அமலில் உள்ள காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரேஷன் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு மாதத்தில் இதுவரை 1.84 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் தொடா்ந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நபருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூன் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியன விலையின்றி வழங்கப்பட உள்ளன.

கடைகளில் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், தினமும் குறிப்பிட்ட அளவு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் மே 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குகிறார்கள். அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *