தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்

விசாகப்பட்டினம், அக்டோபர்-05

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். ரோகித் சர்மா சதம் அடித்தார்.

இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 100 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர் மட்டும் பொறுமையுடன் விளையாடி சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக களத்தில் இருந்த கேப்டன் டூ பிளசீஸ் அரை சதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டீ காக், பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேரமுடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நடைபெற்ற நான்காவது நாளில் 431 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம், முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா அணி 71 ரன்கள் பின் தங்கியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *