இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்வு.. 4706 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரசால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மே-29

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 165799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 175 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3414 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,982 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18,616 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 19,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,548 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 16,281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7495 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *