புலம்பெயர் தொழிலாளர்களிடம் பேருந்து, ரயில் கட்டணத்தை வசூலிக்க கூடாது.. செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க கூடாது. அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மே-28

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதில் பலர் விபத்து மூலமாக இறந்தனர். சிலர் பசியால் உயிரிழந்தனர். இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. ஆனால் ரெயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்களிடம் பணம் கேட்பதாகவும், சரியாக உணவு வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 2 நாள்களில் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விசாரணை நடைபெற்ற போது, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட மாநிலங்களே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது, மாநில அரசுகளே அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே உணவு, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *