சென்னை பள்ளி மாணவர்களுக்கு 6000 இலவச ஸ்மார்ட் ஃபோன் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாடு..

இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்த ஏதுவாக சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6000 ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, மே-28

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது.

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி 6 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் உதவியுடன் மாணவர்கள் இணையதளம் வாயிலாக பள்ளி ஆசிரியர்களிடம் நேரலையில் பாடங்களை கற்கலாம்.

பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அதன் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட திட்டம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஸ்மார்ட் போன்கள் மற்றும் இலவச மடிக்கணினி உதவியுடன் ஜூம் செயலி மற்றும் கல்விக்காக உருவாக்கப்பட்டு்ள்ள செயலிகள் உதவியுடனும் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

கொரோனாவின் தாக்கத்தினால் மாணவர்களின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்று தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி அனைவரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *