தோனி ஓய்வு குறித்து வதந்தி.. காட்டமான பதிலடி கொடுத்த சாக்ஷி..

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல வீரர் தோனி ஓய்வு பெற்றுவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு அவருடைய மனைவி சாக்‌ஷி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை, மே-28

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என கூறப்பட்டு வந்தது.

ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால், கொரோனா காரணமாக 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ட்விட்டர் தளத்தில் தோனிரிடையர்ஸ் என்கிற ஹேஷ்டேக் ஒன்று டிரெண்ட் ஆகி வந்தது. இதனால் தோனி ஓய்வுபெறவுள்ளதாக ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தோனியின் ஓய்வு பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு அவருடைய மனைவி சாக்‌ஷி ட்விட்டரில் காட்டமாகப் பதில் அளித்தார். அதில், “இது வெறும் வதந்தி தான். லாக்டவுன் காலம் மக்களின் மனநிலையை நிலையில்லாததாக மாற்றியுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த பதிவை அவர் வெளியிட்ட சிறிது நேரம் கழித்து சாக்‌ஷி அந்த பதிவை நீக்கிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *