ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு

சென்னை, அக்டோபர்-04

2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்பாவு தன் கோரிக்கை மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். கடைசியாக 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மறுபடியும் எண்ண உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், உயர்நீதிமன்றத்திலேயே 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், தேர்தல் ஆணையம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படியும் உத்தரவிட்டார்.

அதன்படி, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் முன்னிலையில் காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. 19, 20, 21 சுற்றுகளில் பதிவான வாக்குகள் எண்ணபட்டுள்ளன. இதற்கிடையில், இன்பதுரை தாக்கல் செய்த மனுவில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வழக்கு 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டதால், 23-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பொறுத்து வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *