தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?.. மாவட்ட ஆட்சியர்களுடன் மே 29ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 29ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, மே-27

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக மே 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிப்பார் என்று தெரிகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 5ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த 5ம் கட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் நோய் அதிகம் பாதித்து வரும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்துகளான பஸ், ரயில் பயணங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.

அதேநேரம், மத்திய அரசும் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை பார்த்துவிட்டு, தமிழக அரசு தனது முடிவை வருகிற 30 அல்லது 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *