தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது…அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-27

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்,. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது முடிவாகவில்லை. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து குழு தரும் அறிக்கையை வைத்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *