இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்..!

இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

கொழும்பு, மே-27

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆறுமுகன் தொண்டமான், நேற்று தனது அலுவலத்தில் இருந்தபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கொழும்புவில் உள்ள தலங்காமா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தலங்காமா மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, பல்வேறு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தினர். 55 வயதான ஆறுமுகன் தொண்டமான், இலங்கையின் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர் அந்நாட்டு அமைச்சரவையில் பல்வேறு இலாகாக்களுக்கு பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முகமாக திகழ்ந்த செளமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆறுமுகன் தொண்டமான். அவரது மறைவுக்கு இலங்கை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *