லலிதா ஜுவல்லரி கொள்ளை: தேடப்பட்ட குற்றவாளி சுரேஷ் கைது

திருவாரூர், அக்டோபர்-04

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் சுரேஷ் தனிப்படை போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளான்.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ம் தேதி சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது விலங்குகளின் முகத்தை போன்ற முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவனிடமிருந்து 5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. தப்பியோடி சீராத்தோப்பு சுரேஷை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருவாரூர் பதுங்கியிருந்த கொள்ளையன் சுரேஷை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவன் தான் மூளையாக செயல்பட்டவன் என்றும், அவன்மீது இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதும் போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *