ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு?

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, மே-26

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,167ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60, 491 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2வது இடத்தில் தமிழகமும், 3வது குஜராத்தும், 4வது இடத்தில் டெல்லியும் உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. ஆனால், இந்த முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச திட்டம் ஏதும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகையால், மாநில முதல்வர்கள்தரும் அறிக்கையில் அடிப்படையில் ஊரடங்கு ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *