மத்திய அரசின் ஊரடங்கு தோல்வியில் முடிந்துவிட்டது.. ராகுல் காந்தி சாடல்!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு வியூகம் முழு தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லி, மே-26

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காணொலி மூலம் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம். ஊரடங்கின் நோக்கமும், தேவையும் தோல்வியடைந்துவிட்டது. படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் அது நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவவில்லை. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விஷயத்தில் தனது முதல் திட்டம் தோல்விடைந்துவிட்டது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்.

எனவே, அரசு தனது புதிய திட்டத்தை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு இப்போது பணம் மற்றும் மூலதனம் என்ற ஊசி தான் தேவை. அதை செய்யாவிட்டால் நிலைமை அபாயகரமானதாக மாறும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் நாட்டில் வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். அவர்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். யாரும் அவர்களின் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இப்போதுகூட நம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு 7500 ரூபாய் கொடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பை எப்படித் தடுக்கப் போகிறோம் என்பது குறித்து மத்திய அரசிடம் இதுவரையில் ஒரு தெளிவான பார்வை இல்லை. 21 நாட்களில் கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது 60 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகுதான், இந்த பிரச்சனை ஆரம்பிக்கவில்லை. மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் நம் காதுகளில் விழுந்தன. ஆனால் அதனால் யாருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஒரு தேசிய தலைவராக இருந்து கொண்டு நான் இப்படி சொல்ல வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது சிறு குறு நிறுவனங்களை நடத்தியோரும் தங்கள் தொழிலை நிறுத்தி விட்டு வேலை இல்லாமல் போகக்கூடிய நிலைமை தான் நாட்டில் இருக்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *