ஜூன் 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-26

மீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தின. இதையடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பதில் மே 31-ஆம் தேதி முடிவடைகிறது.

இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 15 ஆம் தேதிதான் தடைக்காலம் துவங்கும். ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் இருக்கும்.

இதனால், மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *