தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை.. பரிசோதனையை விரைவுபடுத்த திட்டம்..

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து மேலும், 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததுள்ளது. இந்த பிசிஆர் கருவிகள் மூலம் கொரோனா சோதனையை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-26

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக RT-PCR கருவிகள் மூலம் தொடர் சோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை, 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது. முதலில் ஒரு லட்சம் RT-PCR சோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 10 லட்சம் RT-PCR சோதனைக் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து கடந்த 17-ம் தேதி 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்த நிலையில், இன்று மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இந்த கருவிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, கொரோனா பரிசோதனையை மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *