தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, மே-25

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருபத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன்கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *