இந்தியாவில் கடைசியாக முடி சூட்டப்பட்ட அரசர் சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்..

இந்தியாவின் கடைசியாக பட்டம் சூட்டப்பட்ட அரசர் என்ற பெருமை கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி (89) காலமானார். இவர் தமிழகத்தின் கடைசி ஜமீனும் ஆவார்.

திருநெல்வேலி, மே-25

திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக காலாமனார்.

சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள்.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஜமீன் சிங்கம்பட்டியில், சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகள் பராமரிக்கப்பட்டதாகவும், 5 தந்தப் பல்லக்குகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் சிங்கம்பட்டி ஜமீனுக்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் உள்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜ உடையில் மக்களுக்குக் காட்சியளித்து வந்தார்.

அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை கட்டுவதற்கு சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் இலவசமாக இடம் வழங்கப்பட்டுள்ளதால் தீர்த்தபதி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *