இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக்குறைவால் மொகாலியில் காலமானார். அவருக்கு வயது 96.

டெல்லி, மே-25

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதி மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி அன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து பல்பீர் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இன்று காலை 6.30 மணி அளவில் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்வு செய்த 16 ஜாம்பவான் வீரர்களில் பல்பீர் சிங் மட்டுமே ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பதால் இந்த அங்கீகாரத்தை அவர் பெற்றார். 1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வென்று இருந்தார். 1952இல் இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனாகவும், 1956இல் கேப்டனாகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1957இல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து இந்திய அரசு கௌரவித்தது.

பின்னர் 1975இல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவர் இருந்த போது தான் இந்தியா தன் முதல் ஹாக்கி உலகக்கோப்பையை வென்றது. அதன் பின் இப்போது வரை உலகக்கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்பீர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுக்களை சேர்ந்த வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *