சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

டெல்லி, மே-25

இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. மக்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைப்பிடித்து தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ரமலான் திருநாள் அன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள்’ என கூறியுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திருவிழா சமூகத்தின் பரிதாபம், இரக்கம், நல்லிணக்கம் ஆகியவற்றை குறிக்கிறது. கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான சமூக இடைவெளியுடன் வீட்டிலேயே இருந்து ஈதுல் கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *