ஜூன் இறுதி வரை திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து..தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி, மே-24

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, பொது இடங்களான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன்படி திருமலையிலும் ஏழுமலையான் தரிசனம் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. எனவே, தேவஸ்தானம் மார்ச் 13 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கான கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தியது.

மேலும், தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் சில பல தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் ஜூன் மாதம் பொது முடக்கம் விலக்கப்பட்டவுடன் தரிசனம் அமல்படுத்த தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளை வாயிலாக ஆன்லைனில் வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் ரத்து செய்து கொள்ளும் வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்போது பக்தர்கள் விரும்பும் தேதியில் ஏழுமலையான் பிரேக் தரிசனம் அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *