கேரளாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா..வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் பாதிப்பு..

கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், மே-24

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கேரளா சிறப்பாக செயல்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல் மற்ற மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் நபர்கள் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும்பாலானவை கேரள மாநிலம் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. அந்த விமானங்கள் மூலம் வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் ஒன்று, இரண்டு என இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 63 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று 53 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 322 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 520 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை பல மாவட்டங்களில் 95,394 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 94,662 வீட்டு கண்காணிப்பிலும் 732 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 53,875 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52,355 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

மும்பையில் இருந்து திருச்சூருக்கு வந்த 73 வயதான பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *