இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு, பிரச்சாரத்திற்கும் தயார்!!!

சென்னை, அக்டோபர்-04

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளிக்கும் என்றும், பா.ஜ.க. சார்பில் 2 தொகுதிகளிலும் யாரெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியிருந்தார்.  ஆனால் தமிழக பா.ஜ.க. தரப்பில் இதுவரை அதிமுக எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை, ஆதரவு கொடுப்பது தொடர்பாக அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக அலுவலகம் சென்று பொன்.ராதா கிருஷ்ணனை சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதா கிருஷ்ணன், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவின் அகில இந்திய தலைமையை சந்தித்து ஏற்கெனவே ஆதரவு கோரப்பட்டது. ஆதரவு தெரிவிப்பதாக எங்கள் தலைமை முடிவெடுத்துள்ளது. மரியாதை நிமித்தமாக அமைச்சர் ஜெயக்குமார் இங்கு வந்து ஆதரவு கேட்டார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. மக்களவை தேர்தலிலிருந்தே எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது. இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார். விக்கிரவாண்டியில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும், நாங்குநேரியில் காங்கிரஸ் துடைத்தெறியப்படவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பொ.ராதா சூளுரைத்தார்.  மேலும், அதிமுகவை ஆதரித்து பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை பாஜக ஆதரிக்கும். இரு தரப்பு கருத்துக்களும் பரிமாறப்பட்டது என்றார். வேலூர் மக்களவைத் தேர்தலின் போது பாஜக தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லையே, இடைத் தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், வேலூரில் அதிமுக போட்டியிடவில்லை, அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அது வேறு, இது வேறு. இடைத்தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *