சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை திங்கள்கிழமை (மே 25) முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, மே-24

கொரோனா தொற்று பரவலை கட்டுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ரயில், விமானம் மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்திதில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று முழுமையாக குறைந்துள்ள 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

புதிய தளர்வுகளின் படி, நோய்த்தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு, மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, பொது மக்கள் அனுமதிக்கப்பட்ட மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 18 ஆம் தேதி முதல் ஊரடங்கில் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற மாவட்டங்களில் பிட்டர், பிளம்பர், தச்சர் உள்ளிட்ட தனிநபர் பணியாளர்கள், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனி இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளுடன் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சென்னை பெருநகரம் தவிர, தமிழக முழுவதும் குளிர்சாதனம் வசதி இல்லாத சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை திங்கள்கிழமை (மே 25) முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் தொழிற்சாலைகள் 25 சதவீதம் தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்க வேண்டும். அதாவது 100 பணியாளர்கள் இருப்பின் ஒரு நாளைக்கு 25 பேர் அடுத்த நாளைக்கு அடுத்த 25 பேர் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வரும் ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தமாக கை கழுவ வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *