கொரோனா எதிரொலி.. 8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட முடியாமல் தவிப்பு.. உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் பிரச்னையால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா, மே-23

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது;

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் குறைந்தது 68 நாடுகளில் வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் கணிசமாக தடைபட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளில் வாழும் 1 வயதுக்குட்பட்ட சுமார் 80 மில்லியன் (8 கோடி) குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 129 நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட (53 சதவீதம்) நாடுகள் கடந்த மார்ச், ஏப்., மாதங்களில் தடுப்பூசி சேவைகளை மொத்தமாக நிறுத்தி வைத்ததாக அறிவித்துள்ளன. கொரோனா பரவலால், பிறந்து ஓராண்டு வரையில் குழந்தைகளுக்கு எபோலா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், போலியோ போன்ற நோய்களை தடுக்க வழக்கமான தடுப்பூசிகள் போடப்படுவது குறைந்துள்ளதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *