நீட் ஆள் மாறாட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

புதுடெல்லி, அக்டோபர்-04

நீட் ஆள் மாறாட்ட புகாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருகிற 15-ம் தேதி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என கோவையை சேர்ந்த தீரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 25-ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 7 கேள்விகளை எழுப்பி தமிழக  அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி ஒரு இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், அதிகாரிகளின் துணையில்லாமல் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும், எத்தனை பேர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டார்கள், எவ்வளவு பணம் கைமாறியது என அடுக்கடுக்காக கேள்வியெழுப்பினர்.

இதனை தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழக சுகாதார துறை, தமிழக சட்டம் ஒழுங்கு, தமிழக சிபிசிஐடி ஆகியோரை எதிர்மனுதாராராக சேர்த்து, வருகிற 15-ம் தேதி நீட் ஆள் மாறாட்ட புகாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிபிசிஐடி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *