உள்ளாடைகளுடன் கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர்..! அதிரடியாக பணி நீக்கம்..!

ரஷ்ய மருத்துவமனையில் உள்ளாடைகளுடன் பணியில் ஈடுபட்ட செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது .

மாஸ்கோ, மே-23

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 100 மைல் தூரத்தில் அமைந்துள்ளது துலா நகரம். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகப்பெரிய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு பகுதியில் ஆண்கள் மட்டும் சிகிச்சை பெறும் வகையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 வயது மதிக்கத்தக்க செவிலியர் ஒருவர் பணியாற்றி வந்தார். நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்பரவாமல் பாதுகாக்க PPE எனப்படும் முழு உடற்கவச உடை ஒவ்வொரு மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் அந்த உடையை அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்பது விதி, இதில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆனால் பிளாஸ்டிக்கால் ஆன உடை என்பதால் அதை அணிந்து கொண்டு நீண்ட நேரம் பணியாற்றுவது மிகவும் சிரமம் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அசௌகரியம் தெரிவித்து வருகின்றனர். இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட சிரமப்படுவதாக கூறிவருகின்றனர். அதேபோல் பெரும்பாலான கவச உடைகள் கண்ணாடி போல் இருப்பதால் , உள்ளே அணிந்திருக்கும் ஆடைகள் வெளியில் தெளிவாக தெரியும் வகையில் உள்ளன. இந்நிலையில் செவிலியர் உடையை அணிந்து அதன் மீது PPE அணிந்தால் சிரமமாக இருக்கும் என்பதாலும் , வெப்பம் அதிகமாகி வியர்க்கும் என்பதாலும் அந்த இளம் செவிலியர் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு அதன்மீது PPE அணிந்து வார்டில் பணிபுரிந்துள்ளார் .

இது தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது . இதனையடுத்து மருத்துவமனையின் விதிகளை மீறி அந்த செவிலியர் நடந்து கொண்டதாக கூறி அவரை பணி நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது . மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உடை கட்டுப்பாடு மிகவும் அவசியம் ,பொறுப்புமிக்க சேவைப் பணியில் உள்ளவர்கள் ஒழுக்கம் நிறைந்த தோற்றத்துடன் சேவையாற்ற வேண்டும் . மருத்துவமனை விதிமுறைகளுக்கு ஊழியர்கள் இணங்க வேண்டியது மிகவும் அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *