ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம், மே-23

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது ;-
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மதுரையைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தங்களது பட்டியல் இனத்தை இழிவு படுத்தி பேசியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அது மிக வேடிக்கையாக உள்ளது.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வேண்டுமென்றே அரசின் மீது திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை செய்து அதில் அனுதாபம் தேடும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது, ஒரு சமூதாயத்தை இழிவு படுத்தி பேசியதற்கு கட்சித் தலைவர் அவரை கண்டித்திருக்க வேண்டும் அதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. ஆனால் ஆர். எஸ் பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி போலவும் அவரை அதிமுக மீது ஊழல் புகார் செய்ததால் அவரை அரசு திட்டமிட்டு கைது செய்தது போல திமுக தோற்றத்தை ஏற்படுத்துகிறது .
இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை.
ஊடகங்களும் உண்மைத் தன்மை அறிந்து செய்தி வெளியிட வேண்டும். அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும் இது அனைத்தும் திமுக திட்டமிட்டு செய்யும் அரசியல் நாடகம்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.