ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்..!

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே-23

திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று கூறியிருந்தார்.

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

அதேநேரத்தில் நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று அதிகாலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான காவலர்கள், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கேட்டுக்கொண்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *