சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-23

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். அதேநேரத்தில் நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் தற்போது காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.

கைதுக்கு பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்புப் பொருள்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் அளித்தேன். இந்த நிலையில் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது செய்துள்ளனர் என்று ஆர்.ஆர்.பாரதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *