கராச்சியில் 107 பேருடன் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.. பலர் பலியானதாக தகவல்..!

பாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த பெரும்பாலானோர் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கராச்சி, மே-22

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான விபத்து நிகழ்ந்த பகுதி அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இதனால், மீட்புப் பணிகளில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவாக தரையிறங்க வேண்டும் என்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விமானி, விமான நிலையத்தை சுற்றி வந்து தரையிறங்க முயற்சித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுவரை விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து நான்கு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விமானம் விழுந்ததால் காயமடைந்த குடியிருப்பு வாசிகளும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *