ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்காலத் தடை

புதுடெல்லி, அக்டோபர்-04

ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் வரும் 4-ம் தேதி மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி இன்பதுரை தாக்கல் செய்த வழக்கு 64-வது எண்ணாக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, ரவீந்திராபட் அமர்வு முன் விசாரணைக்கு வந்த வழக்கில் இன்பதுரை சார்பில் அட்டர்ஜி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் என அவர் வாதிட்டார்.

மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கமுடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்ற அமர்வு, வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வருகிற 23 வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து விளக்கமளிக்க எதிர்த்தரப்பு அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *