ப.சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி, அக்டோபர்-04

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மற்றும் சிலர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 3-ம் தேதி விசாரனையின் போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 17ஆம் தேதி நீட்டித்து உத்தரவிட்டது.

முன்னதாக, சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவமானப்படுத்தும் நோக்கில் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றக் காவலில் நீண்ட காலம் வைத்திருப்பது சரியானதா என ஆய்வு செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக வருகிற 15-ம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *