வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 31 வரை கடன்களுக்கான இஎம்ஐகளை வங்கிகள் வசூலிக்காது.

டெல்லி, மே-22

டெல்லியில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17% ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21% குறைந்துள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 6.5% அளவிற்கு சரிந்துள்ளது.

வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும், உணவு தானிய உற்பத்தி 3.7% அதிகரித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 2020-21 நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அந்நிய செலாவணி இருப்பு 9.2 பில்லியன் அதிகரித்துள்ளது. மே 15 வரை, அந்நிய செலாவணி இருப்பு 487 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும்.

வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மாா்ச், ஏப்ரல் மற்றும் மே என மூன்று மாதங்கள் இஎம்ஐ சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று மாதங்கள் வங்கிகள் கடன்களை வசூலிக்காது. வங்கியில் இருப்பு இருந்தால் மட்டுமே எடுக்கும். அத்துடன் வங்கிகளில் வீட்டு கடன் மற்றும் வாகன கடன் வட்டி குறையும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *